Top Stories

நாடாளுமன்ற மரபுகளை ராகுல் காந்தி மீறுகிறார்- கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

சபாநாயகரை அவமதிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.

புதுடெல்லி,

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் தொடர்பான சர்ச்சையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தை, அரசியல் ஆதாயத்திற்காகத் தவறான முறையில் ராகுல் காந்தி பயன்படுத்துகிறார். ராணுவ தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான உரையாடல்கள், அல்லது பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு இடையிலான ரகசியத் தொடர்புகள் அனைத்தும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?.

நாடாளுமன்ற மரபுகளை ராகுல் காந்தி மீறுகிறார்: சபாநாயகரை அவமதிப்பது துரதிர்ஷ்டவசமானது. எதிர்க்கட்சியினரால் மக்களவை தலைவர் ஓம்பிர்லா வேதனையடைந்துள்ளார். மக்களவை தலைவர் அறைக்குள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 முதல் 25 எம்.பி.க்கள் நுழைந்து அவரிடம் முறையற்றவாறு நடந்து கொண்டனர். நானும் அங்குதான் இருந்தேன். அவைத் தலைவர் மென்மையான மனிதர்; இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

தான் பேசுவதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறினார். யாருடைய அனுமதியும் இல்லாமல், தன்னுடைய விருப்பம்போல் பேசுவேன் என்றும் ராகுல் கூறினார். ஆனால், தலைவர் அனுமதியின்றி, அவையில் உறுப்பினர்கள் எவரும் பேச முடியாது. பிரதமர்கூட அனுமதியுடன் மட்டுமே பேச முடியும். அனைவரும் அனுமதியுடன்தான் பேசுகிறார்கள்.

ராகுல் காந்திக்கு என்னால் பாடமெடுக்க முடியாது. அவர் எந்த உலகில் வாழ்கிறார் என்பது புரியவில்லை. அவர் எந்தக் கொள்கைகளால் இயங்குகிறார்?. நாடாளுமன்றம் இப்படி செயல்பட முடியாது என்று அவருக்கு காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.