மும்பை,
ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு தீவிர மனஅழுத்த நோய் இருந்ததாகவும், அவர் தூங்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் அவரது சகோதரர் கூறினார்.
4 பேர் சுட்டுக்கொலை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் பால்கர் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங்(வயது34) தனது மேல் அதிகாரியான உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா மற்றும் 3 பயணிகளை தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்தார். ஓடும் ரெயிலில் பயணிகளை பதற வைத்து இந்த படுபாதக செயலை செய்த சேத்தன் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவரை வருகிற 7-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அவரிடம் மிரா ரோடு ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேத்தன் சிங் தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
தூங்க முடியாமல் அவதிப்பட்டார்
இதுபற்றி டெல்லியில் போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்து வரும் சேத்தன் சிங்கின் இளைய சகோதரர் லோகேஷ் கூறுகையில், "எனது சகோதரர் அடிக்கடி கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார். தூங்க முடியாமல் அவதிப்பட்டார். தலையில் ஏதோ இரைச்சல் சத்தம் கேட்பதாக அவர் உணர்ந்தார். ஆனால் தான் படும் அவஸ்தையை உயர் அதிகாரிகள் புரிந்து கொள்ளாததால் விரக்தியில் இருந்தார்" என்றார். ஆனால் மனஅழுத்த நோய் இருக்கும் நிலையில் அவரை ரெயிலில் பாதுகாப்பு பணியில் அமர்த்தியது ஏன்?, அவர் கையில் துப்பாக்கியை கொடுத்தது ஏன்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ரெயில்வே வாரியம் அமைத்த 5 நபர் உயர்மட்டக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
தலா ரூ.10 லட்சம் இழப்பீடு
இந்த நிலையில் கொலையான பயணிகளில் 2 பேர் மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவை சேர்ந்த காதர் பான்புர்வாலா (62) மற்றும் பீகாரை சேர்ந்த அஸ்கர் அப்பாஸ் அலி (48) என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டது. அவர்களது உடல்களை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மற்றொரு பயணி ஐதராபாத்தை சேர்ந்த சையது சைபுதீன் என்பதும், அவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பீதர் என்பதும் தெரியவந்தது. அவரது குடும்பத்தினர் நேற்று மும்பை வந்து உடலை பெற்றுச் சென்றனர். இதுபற்றி மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், "ரெயிலில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 3 பயணிகளின் உடல்களையும் அவர்களது உறவினர்கள் உரிமைக்கோரி உள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. கொலையான உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவின் உடல் ரெயில் மூலமாக சொந்த ஊரான ராஜஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டது" என்றார்.