ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சாயக்காரத்தெருவை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தினை முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதில் வாலிபரின் மனைவியின் படத்தை மட்டும் மார்பிங் செய்து தவறாக சித்தரித்து ஒருவர், போலியான முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். இதைக்கண்ட அந்த பெண்ணின் கணவர், மேற்கண்ட முகநூல் பக்கத்தின் அட்மினை தொடர்பு கொண்டு படத்தை நீக்குமாறு கூறியுள்ளார். அதனை நீக்கிய நபர், மற்றொரு முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்யப்போவதாக கூறியபோது, கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வந்ததாம். மேலும் அந்த வாலிபரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பாவிட்டால் மேலும் மார்பிங் செய்து படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டதாம்.
இதனால் அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் சைபர்கிரைம் உதவியுடன் போலீசார் மேற்கண்ட முகநூல் பக்கத்தினை ஆய்வு செய்தபோது அது மயிலாடுதுறை காமராஜர் சாலையை சேர்ந்த சிவா(வயது28) என்பவருடையது என தெரிந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் மயிலாடுதுறை சென்று அவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் மெக்கானிக்கல் என்ஜினீயர் என்பதும், மயிலாடுதுறை பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தியதும் தெரிந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்த இவர், இதுபோன்று முகநூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து தனது போலியான முகநூல் பக்கத்தில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு மிரட்டுவதை வழக்கமாக கொண்டவர் என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குபதிவு செய்து சிவாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் பிரத்யேக செல்போன்-94899 19722 என்ற எண்ணில் புகார் செய்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.