ஆன்மிகம்

புண்ணியம் வழங்கும் ‘ரத சப்தமி’

சூரிய பகவான் தன்னுடைய தேரை, தெற்கில் இருந்து முழுமையாக வடக்கு நோக்கி திருப்பும் நாளை ‘ரத சப்தமி’ என்கிறோம்.

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விழாவை சூரிய ஜெயந்தி என்றும் சொல்வார்கள். சப்தம் என்றால் ஏழு என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் வருவது, சப்தமி திதி. உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே ரத சப்தமியாக கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் சூயன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும், ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குவதாக புராணங்கள் சொல்கின்றன.

ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது நல்ல பலனைத் தரும். அப்படிச் செய்ய முடியாதவர்கள், வீட்டில் அதிகாலையில் உதித்து வரும் சூரியனின் ஒளி படும் இடத்தில் நின்று நீராடுவது உத்தமம். அப்படி நீராடும் போது, பெண்கள் ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதை யும், ஆண்கள் மற்றும் குழந்தைகள், ஏழு எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும் என்பது ஐதீகம். ஏழு எருக்கம் இலைகளில் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வது செல்வ வளத்தையும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராடுவது சிறப்பு. கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

ரத சப்தமி அன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய- சந்திரரை வரைந்து, அவர்கள் பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய நாராயணரின் துதிகளைச் சொல்லி வழிபட வேண்டும். சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்திலும் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம். இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருப்பதியில் ஒரு நாள் பிரமோற்சவம்

ரத சப்தமி அன்று, திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் ஒரு நாள் பிரமோற்சவம் நடைபெறும். இதனை சிறிய பிரமோற்சவம் என்பார்கள். இந்த ரதசப்தமியின் ஒரே நாளில், ஸ்ரீதேவி- பூதேவி உடனாய மலையப்ப சுவாமி, 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வருவார். அன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 மணிக்கு சின்ன ஆதிசேஷன் வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், பகல் 1 மணிக்கு அனுமன் வாகனத்திலும் வலம்வருவார். பகல் 2 மணிக்கு சக்கர ஸ்நானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபையிலும் சுவாமி வலம் வருவார்.