மாவட்ட செய்திகள்

அடகு வைத்த நகைகளை மீட்க காப்பீடு தொகைக்காக காரை கடத்தியதாக நாடகமாடினார் - ஆந்திர தொழில் அதிபர் கைது

அடகு வைத்த நகைகளை மீட்க, காப்பீடு தொகையை பெறுவதற்காக காரை மர்மநபர்கள் கடத்திச் சென்று விட்டதாக நாடகமாடிய ஆந்திர தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

துமகூரு,

ஆந்திர மாநிலம் மடகாஷி பகுதியை சேர்ந்தவர் தொட்டேகவுடா. தொழில் அதிபரான இவர் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், நான் கடந்த 21-ந்தேதி ஆந்திராவில் இருந்து துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா பாவகடா- நீலஹள்ளி ரோட்டில் வந்து கொண்டிருந்தேன். அப்போது 3 பேர் என்னை வழிமறித்தனர். பின்னர் என்னை தாக்கிவிட்டு அவர்கள் காரை கடத்திச் சென்றுவிட்டதாகவும், எனவே அவர்களை கண்டுபிடித்து எனது காரை மீட்டு தரும்படியும் அவர் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தொட்டேகவுடாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தொட்டேகவுடா போலீசாரிடம் முன்னுக்குப்பின் குழப்பமான தகவல்களை தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதாவது, தொழில் அதிபர் தொட்டேகவுடா ஆந்திராவில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்தில் ரூ.12 லட்சத்துக்கு தனது நகைகளை அடகு வைத்துள்ளார். அதற்கான வட்டியை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் அந்த நகைகள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது காரை மர்மநபர்கள் கடத்திச் சென்று விட்டதாக கூறி, காருக்கான காப்பீட்டு தொகையை பெற கார் கடத்தப்பட்டதாக கூறி அவர் நாடகமாடியது தெரியவந்தது. மேலும் அவர் அந்த காரை ஆந்திர மாநிலம் ரங்காபூரில் உள்ள உறவினரின் வீட்டில் மறைத்து வைத்ததும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து தொட்டேகவுடாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இதுபற்றி மதுகிரி போலீசார் கைதான தொட்டேகவுடாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.