மாவட்ட செய்திகள்

வடமதுரை பஸ் நிறுத்தத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வடமதுரை பஸ் நிறுத்தத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு செய்தார்.

வடமதுரை:

வடமதுரையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வர போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பஸ் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் இயக்கப்படுகிற ஒரு சில பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

புளி மூட்டையை அடைப்பதை போல மாணவ-மாணவிகளை பஸ்சில் ஏற்றி செல்வது வடமதுரையில் அன்றாடம் அரங்கேறும் அவலமாகி விட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தினத்தந்தியில் செய்தி வெளியாகியது.

இதன் எதிரொலியாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் உத்தரவின்பேரில் வேடசந்தூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்த் வடமதுரை பஸ் நிறுத்தத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளி மாணவர்களிடம் சாலையில் ஓடிச்சென்று பஸ் ஏறக்கூடாது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறினார். மேலும் மாணவ-மாணவிகளை வரிசையாக நிற்கவைத்து ஒழுங்குபடுத்தி பஸ்சில் ஏற வைத்தார்.

போக்குவரத்து துறையினருடன் ஆலோசித்து மாலை நேரத்தில் பள்ளிவிடும் வேளைகளில் கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்