மாவட்ட செய்திகள்

2-வது நாளாக உறவினர்கள் சாலை மறியல்

வீரபாண்டி அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் மதுரை-தேனி சாலையில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி:

போடி தாலுகா டொம்புச்சேரியை சேர்ந்த பவுன்ராஜ் மகன் பிரபாகரன் (வயது 29).

இவர் வீரபாண்டி அருகே தாடிச்சேரி பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற பிரபாகரன் மின்சாரம் பாய்ந்து இறந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தகவலறிந்து தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்த பிரபாகரனின் உறவினர்கள், அவர் சாவில் மர்மம் இருப்பதாககூறி, மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் 2-வது நாளாக நேற்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்பு உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்கள் பிரபாகரனின் உடலை வாங்கி சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.