மாவட்ட செய்திகள்

கடமன்குட்டை கிராமத்தில் பாதை வசதி இல்லாததால் பெண்ணை தூளிக்கட்டி தூக்கி வந்த உறவினர்கள்

கடமன்குட்டை கிராமத்திற்கு பாதை வசதி இல்லாததால் பிரசவத்தின் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் தூளிக்கட்டி தூக்கி வந்தனர்.

தேன்கனிக்கோட்டை:

கடமன்குட்டை கிராமத்திற்கு பாதை வசதி இல்லாததால் பிரசவத்தின் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் தூளிக்கட்டி தூக்கி வந்தனர்.

நிறைமாத கர்ப்பிணி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்டது கடமன்குட்டை மலைக்கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மனைவி மாதுரி (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் மாதுரிக்கு ரத்தப்போக்கு அதிகரித்து வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் முனியப்பா மற்றும் உறவினர்கள், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக அந்த பெண்ணை கீழே கொண்டு வருமாறு அவர் தெரிவித்தார். இந்த கிராமத்திற்கு பாதை வசதி இல்லாததால் உறவினர்கள் மாதுரியை, தூளிக்கட்டி வனப்பகுதி வழியாக தூக்கி கொண்டு கீழே வந்தனர். அதற்குள் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரங்கநாதன், செவிலியர் மாலாஸ்ரீ, கிராம செவிலியர் சோபியா, 108 ஆம்புலன்சுடன் கடமன்குட்டை நோக்கி சென்றனர்.

சிகிச்சை

அவர்கள் மலைக்கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக நடந்தே சென்று தூளிக்கட்டி கீழே தூக்கி வரப்பட்ட மாதுரிக்கு சிகிச்சை அளித்தனர். முதல் கட்டமாக நஞ்சுக்கொடியை அகற்றி, ரத்தப்போக்கை சரி செய்த மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து கீழே அழைத்து வரப்பட்ட மாதுரி, அவரது பெண் குழந்தையும், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவகுழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு தாய், சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.