ராமேசுவரம்,
இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறை தண்டனை நிபந்தனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைப்பு
ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டிணம் பகுதியில் இருந்து கடந்த மாதம் மற்றும் இந்த மாதம் 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 19 மீனவர்களும் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த 19 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்தும் படகு உரிமையாளர்கள் ஜூலை மாதம் 15-ந்தேதி ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
நிபந்தனை
மேலும் இந்த மீனவர்கள் இன்னும் 10 ஆண்டு களுக்கு எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது. அதை மீறி வந்தால் 1 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்று நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் மீனவர் களின் படகுகள் விடுதலை செய்யப்படாததால் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதுபோல் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.