மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தலைவிரித்தாடுகிறது. இதன் எதிரொலியாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு பஸ் நிலைய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நகரமைப்பு அலுவலர் இந்திரா தலைமையிலான அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பஸ் நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவர்கள், படிக்கட்டுகள், மேற்கூரைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் பஸ் நிலையத்தை சுற்றிலும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள், தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

மீண்டும் அந்த இடங்களில் கடைகளை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.