மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

கரூர்,

கரூர் அருகே உள்ள காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் மருத்துவக்கல்லூரியின் மேற்கு பகுதி நுழைவுவாயில் அருகே 30-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் கடைகள் செயல்பட்டு வந்தன. மேலும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மோட்டார் சைக்கிள்களை நீண்ட வரிசையில் நிறுத்துவதால் அந்த வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.