மாவட்ட செய்திகள்

2-வது நாளாக மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

2-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரமும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்க வேண்டும்.

தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்று திண்டுக்கல், பழனி மற்றும் செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில், தபால் நிலைய அலுவலக சாலையில், சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக போலீசார், அந்த சாலையில் போக்குவரத்தை துண்டித்து, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது.

சாலையோரங்களிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சமூக நலத்துறை செயலாளர் மதுமதி காணொலி மூலம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், ஒருவார காலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 17-ந்தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.