பெங்களூரு

குழந்தைகளின் மனதில் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை விதைக்கும் அரசு; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

குழந்தைகளின் மனதில் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை விதைக்கும் அரசு என டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சமுதாயம் முன்னேற்றம் அடைய கல்வி தான் அடித்தளம். ஆனால் பா.ஜனதா தனது வலதுசாரி கொள்கையை முன்வைத்து கல்வியில் அரசியல் செய்கிறது. இந்த பா.ஜனதா அரசு குழந்தைகளின் மனதில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை விதைக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் நாக்பூர் கல்வி கொள்கையை இந்த அரசு செயல்படுத்துகிறது.

ஆனால் அரசு பள்ளிகளில் போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மதிய உணவு திட்டம் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டது. பள்ளி பாடத்திட்டத்தை பா.ஜனதா அரசு மாற்றி வருகிறது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வி காவிமயம் ஆக்கப்படுவதை கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எதிர்க்க வேண்டும்.

குழந்தைகளின் அடித்தளம் கல்வியால் கட்டமைப்படுகிறது. இந்த அடித்தளம் பலவீனமாக இருக்க கூடாது. வலுவான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. உண்மைகளை மறைத்து வரலாற்றை அழிக்க இந்த அரசு முயற்சி செய்கிறது. நேரம் வரும்போது பா.ஜனதாவை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.