புதுச்சேரி,
காமராஜர் மணிமண்டபம்
புதுவை சாமிப்பிள்ளைதோட்டத்தில் காமராஜர் மணிமண்டபம் கட்ட கடந்த 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தன. பின்னர் நிதி நெருக்கடி காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.
அதன்பின் 2014-ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பணிகள் இன்னும் முடியவில்லை. மணிமண்டபத்தில் நூலகம், சென்டாக் அலுவலகம், கருத்தரங்க கூடங்கள், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம் ஆகியன அமைக்கப்பட உள்ளன. இந்தநிலையில் நேற்று காமராஜர் மணிமண்டபத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிந்ததும் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
6 மாத காலத்திற்குள்...
அரசு கொள்கை முடிவு எடுத்து காமராஜர் மணிமண்டபத்தை கட்டி வருகிறது. இங்கு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் நானும், சபாநாயகரும் ஆய்வு மேற்கொண்டோம்.
இன்னும் 6 மாத காலத்திற்குள் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு விட திட்டமிட்டுள்ளோம். காமராஜரின் பெருமையினை மக்கள் உணரும் வகையில் இந்த மணிமண்டபம் அமையும்.
திறந்தவெளி கலையரங்கம்
இந்த மணிமண்டபம் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. இதற்கான பணிகளுக்கு ரூ.23.60 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் கட்டுமான பணிக்காக மட்டும் ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் மின் சாதன பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோர உள்ளோம்.
மணிமண்டபத்தில் 3 கருத்தரங்க கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. முதல் தளத்தில் திறந்தவெளி கலையரங்கம் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சுவாமிநாதன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.