மும்பை,
ராகுல்காந்தியின் பதவி பறிப்பு அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என்று சரத்பவார் கூறினார்.
பதவி பறிப்பு
பிரதமர் மோடி பற்றி அவதூறு பேசிய வழக்கில் காங்கிரஸ் தலவைர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு மராட்டியத்தில் எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது
சமீபத்தில் எனது கட்சியை சேர்ந்த லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது பைசல் பதவி பறிக்கப்பட்டது. இதேபோல தற்போது ராகுல்காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது. ஜனநாயக மதிப்பீடுகளை தரம்தாழ்த்தி விட்டது. இது கண்டிக்கத்தக்கது.
நமது அரசியலமைப்பு ஒவ்வொரு தனி நபருக்கம் நியாயமான நீதிக்கான உரிமை, சிந்தனை சுதந்திரம், அந்தஸ்து மற்றும் வாய்ப்பின் சமத்துவம், ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.
நமது ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.