பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார், பெரம்பலூர் மேரிபுரத்தில் சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வெளிமாநிலத்தவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ராஜஸ்தான் மாநிலம், ஜோலூர் மாவட்டம், சுரணா கிராமத்தைச் சேர்ந்த லுக்காராம் மகன் நப்பராம் (வயது 32), அவரது தம்பி விக்ரம்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.71 ஆயிரத்து 280 மதிப்புள்ள 564 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, கைதான 2 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.