மாவட்ட செய்திகள்

பாகூர் அருகே பரபரப்பு: கடத்தல் சாராய பாக்கெட்டுகள் சாலையில் வீச்சு - போலீசாரை கண்டதும் வாலிபர் தப்பி ஓட்டம்

பாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் சாராய பாக்கெட்டுகள் கொண்ட சாக்கு மூட்டைகளை சாலையில் வீசி விட்டு தப்பிச் சென்றார்.

பாகூர்,

புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி வாக்காளர்களுக்கு மதுபாட்டில் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் மாநில எல்லை பகுதிகளில் தேர்தல் மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிரமாக ஆய்வு செய்து அதன்பிறகே அனுமதித்து வருகிறார்கள்.

அதன்படி பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் தென்பெண்ணையாற்றங்கரை-சித்தேரி அணைக்கட்டு சாலையில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர்கள் முரளி, அருண் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை சாலையில் கீழே போட்டுவிட்டு வந்த வழியே அதிவேகமாக திரும்பிச் சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை எடுத்து பிரித்து பார்த்ததில் சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. 25 லிட்டர் சாராயம் 500 பாக்கெட்டுகளாக இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் சாராயத்தை கடத்த முயன்ற நபர் யார் என்று வலைவீசி தேடிவருகின்றனர்.