மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கத்தியால் குத்தியவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கத்தியால் குத்தியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கத்தியால் குத்தியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை செம்பூர் பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் அஜய் என்பவர் சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 5ந்தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த அஜய் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்க சத்தம் போட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜய் தான் வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தில் குத்தினார். பின்னர் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அஜயை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கத்தியால் குத்திய அஜய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.