மாவட்ட செய்திகள்

‘சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ மும்பை பா.ஜனதா தலைவர் ஆசிஸ் செலார் தகவல்

மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மும்பை பா.ஜனதா தலைவர் கூறினார்

மும்பை

மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மும்பை பா.ஜனதா தலைவர் ஆசிஸ் செலார் எம்.எல்.ஏ. கூறினார்

மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து யூகத்தின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. கூட்டணி குறித்து பா.ஜனதா, சிவசேனா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்தநிலையில் நேற்று காலை முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசை அவரது இல்லமான வர்ஷாவில் பா.ஜனதா மாநிலத்தலைவர் ராவ்சாகேப் தன்வே, மும்பை தலைவர் ஆசிஸ் செலார் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது சிவசேனாவுடன் கூட்டணி குறித்து பேசுவது பற்றி முதல்மந்திரியுடன் 2 பேரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் முதல் மந்திரியை சந்தித்துவிட்டு மும்பை பா.ஜனதா தலைவர் ஆசிஸ் செலார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட சிவசேனாவிற்கு முறையாக அழைப்புவிடுக்க உள்ளோம். கூட்டணி குறித்து ராவ்சாகேப் தன்வே தலைமையில் சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது வார்டு பங்கீடு குறித்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதாவின் இந்த அறிவிப்பு குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டபோது, மநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இதுவரை எங்களுக்கு பா.ஜனதாவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்ததால் கூட்டணி பங்கீடு குறித்து பா.ஜனதாவில் இருந்து 3 பேரும், சிவசேனாவில் இருந்து 3 பேரும் கலந்து பேசுவார்கள்.

இதைத்தொடர்ந்து நானும், முதல் மந்திரியும் பேசி இறுதி முடிவை எடுப்போம் என்றார்.