பெரம்பலூர்,
2-வது முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் அரசின் உத்தரவின் படி கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 9-ந்தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் 2-வது முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளும், இரவு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருவதால், நேற்று முன்தினம் இரவு 10 மணி முதலே பெரம்பலூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
கடைகள் திறக்கப்படவில்லை
முழு ஊரடங்கில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவையும் திறக்க அனுமதி கிடையாது. இதனால் நேற்று நகர் பகுதியில் பொறுத்தவரை மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் புறநகர் பகுதிகள், கிராம பகுதிகளில் சில இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன.
முழு ஊரடங்கின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன. வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
அத்தியாவசிய பணிகள் இயங்கின
முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் மற்றும் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் இயங்கின. பொங்கல் பண்டிகை கொண்டாடியதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் நேற்று கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கினால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
பசியை போக்கிய அம்மா உணவகம்
உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே உண்டு என்றாலும், பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டதால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான உணவகங்கள் திறக்கப்படவில்லை. நகர்பகுதியில் திறக்கப்பட்ட உணவகங்களையும் போலீசார் மூட வலியுறுத்தி கட்டாயப்படுத்தினர். இதனால் வழக்கமாக திறந்திருந்த அம்மா உணவகங்கள் தான் நேற்று பலரின் பசியை போக்கியது. உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் குறைந்த அளவே இயங்கின.
மறைமுகமாக இறைச்சி விற்பனை
இறைச்சி கடைகளை பொறுத்தவரை நகர்பகுதியில், கிராம பகுதிகளில் மூடப்பட்டிருந்தாலும், பொங்கல் பண்டிகை முடிந்து கரி நாள் என்பதால் நேற்று மறைமுகமாக இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றது. போலீசாரின் கண்ணில் படாமல் பொதுமக்கள் பதுங்கி, பதுங்கி வந்து இறைச்சிகளை வாங்கி சென்றனர்.
மதுவிற்பனை அமோகம்
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று முன்தினமும், நேற்று முழு ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்றாலும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. சட்ட விரோதமாக முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தவர்கள் முழு ஊரடங்கில் கூடுதல் விலைக்கு மது பிரியர்களுக்கு விற்பனை செய்தனர்.
அரசு பள்ளியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்
முழு ஊரடங்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டாலும் தேவையில்லாமல் சுற்றியவர்களை அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். துக்க காரியத்திற்கு செல்பவர்களை அனுமதித்தனர். சில இடங்களில் தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். காணும் பொங்கலையொட்டி முழு ஊரடங்கு என்பதாலும் வெளியே எங்கும் செல்ல முடியாததால் இளைஞர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டை விளையாடி பொழுதை போக்கினர். பெரம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாடினர். இளைஞர்கள் கிரிக்கெட் ஆடினர். இதனை போலீசாரும் கண்டு கொள்ளவில்லை.