மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் மருந்து கடையில் தீ விபத்து: நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு

ஈரோட்டில் மருந்து கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனைக்கு சொந்தமான மருந்து கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்ததும், மருந்து கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் பூட்டப்பட்டு இருந்த மருந்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனே இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, மருந்து கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மருந்துகள், குளிர்சாதன பெட்டி போன்றவை எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.