மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

தூத்துக்குடி அருகே 2 பேரை அரிவாளால் வெட்டிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி துறைமுகம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் ராமமூர்த்தி (வயது 40). இவர் துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய எதிர்வீட்டில் வசிக்கும் ஒருவரிடம், அவருடைய உறவினர் கணேசன் தகராறு செய்துள்ளார். அதனை பார்த்த ராமமூர்த்தி, கணேசனை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவில் கணேசன், ராமமூர்த்தியிடம் பேசுவதற்காக முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வருமாறு செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துள்ளார். இதனையடுத்து ராமமூர்த்தி அவரது உறவினர் சரவணனுடன் முத்தையாபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கணேசன் மற்றும் அவருடைய நண்பர்கள் உத்திரபாண்டி, ரஞ்சித் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி மற்றும் சரவணனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அவருடைய நண்பர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.