சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவசர கூட்டம்
சிவகாசி மாநகராட்சியின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மேயர் சங்கீதா இன்பம் தலைமை தாங்கினார். துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீத வரி உயர்வும், 601 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 50 சதவீதம் வரி உயர்வும், 1201 முதல் 1800 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவீத உரி உயர்வும், வணிக நிறுவனங்களுக்கு தற்போது உள்ள சொத்துவரியில் 100 சதவீதம் உயர்வும், தொழிற்சாலை, சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள வரியில் 75 சதவீதம் உயர்வும், காலி மனை வரிவதிப்பிற்கு 1 சதுர அடி நிலத்திற்கு தற்போதுள்ள அடிப்படை மதிப்பு 100 சதவீதம் உயர்வு செய்து காலி மனை வரி பொது சீராய்வு செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளிநடப்பு
இந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க. கவுன்சிலர் கரை முருகன் கண் மற்றும் வாயை கருப்பு துண்டால் கட்டிக் கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
பின்னர் அவர் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு மாநகராட்சி கூட்டத்தை விட்டு வெளியே சென்றார். அவருடன் அ.தி.மு.க. கவுன்சிலர் சாந்தி, பா.ஜ.க. கவுன்சிலர் குமரி பாஸ்கரன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாநகராட்சி வாயிலில் நின்றுக்கொண்டு அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் 3 பேரும், வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகையை ஏந்தி கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் பேசுகையில், மாநகராட்சியின் அவசர கூட்டம் குறித்த தகவல் எனக்கு தாமதமாக தான் வந்தது. நான் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை கமிஷனர் செய்து கொடுக்க மறுக்கிறார். என்னுடன் ஆலோசனை செய்வதை தவிர்க்கிறார். இதனால் நான் எனது துணை மேயர் பணியினை முழுமையாக செய்யமுடியாமல் போகிறது.
சிவகாசி மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
திருத்தங்கல் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுகிறார்கள் என்று அந்த பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி கமிஷனரை முற்றுகையிட்டனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.