சிவகாசி,
சிவகாசி மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது.
முதல் கூட்டம்
சிவகாசி மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சிக்குரிய கணக்கு உள்பட 11 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இதில் வேலாயுதம் சாலையில் ரூ.5 கோடி செலவில் வணிக வளாகம் கட்டிடம் கட்டும் திட்டத்துக்கு கவுன்சிலர்கள் ஞானசேகரன், மகேஸ்வரி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேபோல் திருத்தங்கல் பகுதியில் உள்ள வார்டு 13-க்கு உட்பட்ட பகுதியில் தார்ச்சாலை அமைக்க ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கிய மாநகராட்சிக்கு கவுன்சிலர் மாணிக்கம் நன்றி தெரிவித்தார். கவுன்சிலர்களுக்கு வழங்கிய தீர்மான நகல் ஆங்கிலத்தில் இருப்பதை சுட்டிக் காட்டி இனி வரும் காலங்களில் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் தீர்மான நகல்கள் தமிழில் இருக்க கவுன்சிலர் சேது ராமன் வலியுறுத்தினார்.
கழிவறை வசதி
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தீர்மானங்கள் மீது விவாதம் செய்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:-
மாணிக்கம்: திருத்தங்கல் பகுதியில் 18,19,20 உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு ஒரே இடத்தில் தான் பெண்கள் கழிப்பிடம் உள்ளது.
நிலானி: பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் நேரடியாக மனு கொடுத்தும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை.
சுதாகரன்: 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த இடைவெளிநாட்களை குறைக்க வேண்டும்.
ரேணுநித்திலா: எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் போதிய கழிப்பிட வசதி இல்லை. குப்பைகள் சரியான முறையில் அள்ளுவது இல்லை.
அடிப்படை வசதி
குமரிபாஸ்கரன்: தொண்டர் துரைச்சாமி நகரில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.
கரைமுருகன்: 2020-2021 சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் அந்த பணி முடிய வில்லை
சூர்யா: எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிக்கு ஒருவர் மட்டுமே துப்புரவு பணிக்கு வருகிறார்.
ஞானசேகரன்: மாநகராட்சி சுகாதார பிரிவு முற்றிலும் செயல் இழந்து கிடக்கிறது.
துப்புரவு பணிகளை அதிகாரிகள் பார்வையிடுவது இல்லை.
டாக்டர் கதிரவன்: எனது வார்டில் 8 கழிப்பிடங்கள் கொண்ட சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் போனதால் இடிக்கப்பட்டுள்ளது. தற்போது கழிப்பிட வசதி இல்லாமல் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்த வெளி பகுதிகளை பயன்படுத்தும் அவலம் உள்ளது.
இதேபோல் கவுன்சிலர்கள் ஜான் முருகேசன், குருசாமி, மாரீஸ்வரி, சாந்தி சிவனேசன், ஜெயராணி, சேவுகன், சீனிவாசராகவன், தங்கபாண்டிசெல்வி, சசிகலா, ரவிசங்கர், ஞானரஞ்சித், சசிக்குமார், பாக்கியலட்சுமி, மகேஸ்வரி ஆகியோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்றும், குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகளை முடிந்தளவுக்கு விரைவில் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பேன் என மேயர் சங்கீதா இன்பம் உறுதியளித்தார்.