சிவகாசி,
சிவகாசி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 48 பேர் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தல்
சிவகாசி மாநகராட்சியில் வெற்றி பெற்ற 48 கவுன்சிலர்களுக்கும் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள 2-வது மாடியில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது. கவுன்சிலர்களாக பதவி ஏற்க உள்ளவர்கள் மட்டும் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழா தொடங்கியதும் கூட்ட அரங்கிற்கு வந்த கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழா
ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியே வந்து உறுதி மொழி வாசித்து பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் வருகை பதிவேட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய பதவி ஏற்பு விழா 11 மணிக்கு முடிந்தது. பின்னர் கவுன்சிலர்கள் அனைவரும் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.