திருப்பூர்,
சரக்கு வாகனம்
திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவர் அதே பகுதியில் பணத்தை வட்டிக்கு விட்டு தொழில் செய்யும் பெண்ணிடம் பணம் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரக்கு வாகனம் வாங்கியதாக தெரிகிறது. அதற்கு கவுதமின் தாயார் சாட்சி கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது.
ஒரு மாதம் கடந்த நிலையில் கவுதமால் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தவணை தொகை கேட்கவே, தனது நிலையை கவுதம் விளக்கி கூறியுள்ளார். அதை அவர் ஏற்றுக்கொள்ளாததால், தனது சரக்கு வாகனத்தை அந்த பெண்ணிடமே ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கவுதமுக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்ய அந்த பெண் முடிவு செய்தார். இதற்காக தனக்கு தெரிந்தவரும், அவினாசி பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மார்ட்டின்லூதர் என்பவரை அணுகியுள்ளார். இதைத்தொடர்ந்து கவுதமை போலீஸ் நிலையத்துக்கு வரும்படி மார்ட்டின்லூதர் அழைத்துள்ளார். ஆனால் அவர் போலீஸ் நிலையத்துக்கு செல்லவில்லை.
இதனால் கவுதமுக்கு பணம் வழங்க பரிந்துரை செய்த பூபதி என்பவரை அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்த மார்ட்டின்லூதர், பூபதியின் செல்போன் மூலம் கவுதமை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மார்ட்டின்லூதர் பேச தொடங்கியது முதலே, தகாத வார்த்தைகளால் கவுதமை தரக்குறைவாக வசை பாடியுள்ளார். அதற்கு கவுதம் தன்னிடம் பணம் இல்லை என்றும், அதனால் தனது வாகனத்தை எடுத்து சென்றுவிட்டதால் நான் எப்படி பணம் கட்டுவேன் என்றும் கேட்டுள்ளார்.
அப்போது மார்ட்டின்லூதர், கவுதமின் தாயாரையும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கவுதம், போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மார்ட்டின்லூதர் தன்னுடன் தரக்குறைவாக பேசிய உரையாடலை பதிவு செய்து வாட்ஸ்அப்பில் நேற்று முன்தினம் இரவில் வெளியிட்டார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் காட்டுத்தீ போல் நேற்று வேகமாக பரவி திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த உரையாடல் குறித்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாவுக்கும் சென்றது. இதைத்தொடர்ந்து, போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மார்ட்டின்லூதரை அழைத்து விசாரணை நடத்தினார். அவரை கண்டித்ததுடன், காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மார்ட்டின்லூதரை பணி இடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.