மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தவக்காலம்

ஏசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். அதன் நிறைவாக ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. ஏசு உயிர் துறந்த புனித வெள்ளி கடந்த 15-ந் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக நேற்று கொண்டாடப்பட்டது.

திருஇருதய பேராலயம்

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

தூத்துக்குடி சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். ஏசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தூய பனிமயமாதா ஆலயம்

இதே போன்று தூய பனிமயமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. லூர்தம்மாள்புரத்திலுள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர், பங்குதந்தை ஆன்றனி புருனோ ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தூத்துக்குடி இன்னாசியர் ஆலயத்தில் பங்குத்தந்தை சேவியர் அருள்ராஜ் தலைமையிலும், ஆரோக்கியபுரம் ஆரோக்கியநாதர் ஆலயத்தில் தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குனர் அமலன் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலியை தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.சகாயம் அடிகளார், ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளார், திருத்தொண்டர் கிங்ஸ்லி அடிகளார் ஆகியோர் நிறைவேற்றினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் காயல்பட்டினம் கொம்பு துறையில் உள்ள புனித முடியப்பர் ஆலயத்தில் உயிர்ப்பு பெருவிழாவை ஒட்டி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பங்குதந்தை பிரதீப் ஏ.காற்றார் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். சிங்கித்துறை புனித செல்வமாதா ஆலயத்தில் பங்குதந்தை சில்வஸ்டர் அடிகளார் உயிர்ப்புப்பெருவிழா திருப்பலி நிறைவேற்றினார்.

புன்னக்காயல், சாயர்புரம்

சேர்ந்தபூமங்கலம் மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்குத்தந்தை செல்வம் அடிகளார், உயிர்ப்பு விழாவினை ஒட்டி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். புன்னைக்காயலில் புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் நடைபெற்ற உயிர்ப்பு பெருவிழாவில் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார்.

சாயர்புரம் வட்டார பகுதியில் சாயர்புரம் சுப்பிரமணியபுரம், நட்டாத்தி, நடுவக்குறிச்சி, சிவத்தையாபுரம், சேர்வைகாரன்மடம், கட்டாரங்குளம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், புதுக்கோட்டை, செந்தியம்பலம், மஞ்சள்நீர்காயல், கோவங்காடு, வலசைகாரன்விலை, புளிய நகர், சக்கம்மாள்புரம், குமாரபுரம், சிவஞானபுரம், முள்ளன்விலை ஆகிய பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையயொட்டி நேற்று அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதேபோல் கோவில்பட்டி, உடன்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், எட்டயபுரம், சாத்தான்குளம், நாசரேத் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

--------