கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் நேற்று பங்குனி உத்திர விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
பங்குனி உத்திர திருவிழா
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில் காலையில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்யாண முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு பூஜை
இதேபோல், கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி செல்வ முத்துக்குமாரசாமி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பர்கூர் ஜெகதேவி சாலையிலுள்ள பாலமுருகன் கோவில், சந்தூர் மாங்கனி முருகன் கோவில், போச்சம்பள்ளி அருகே அகரம் சுப்பிரமணியர் சாமி கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.