தர்மபுரி:-
தமிழ் புத்தாண்டு பிறப்பு
தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற சாலை விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. பின்னர் சாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் சாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடந்த சாமி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல் தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகர்ஜுன சாமி கோவில், வரமஹாலக்ஷ்மி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன், மகாலிங்கேஸ்வரர் கோவில், வேல் முருகன் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் மாரியம்மன் கோவில், எஸ்.வி.ரோடு அபய ஆஞ்சநேயர் கோவில் அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
கூழ் ஊற்றி வழிபாடு
இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி இடும்பன் ஊர்வலம், ஊர் காவல் தெய்வமான அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கூழ் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தாரை, தப்பட்டை மேளம் முழங்க, வாண வேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதேபோல் குமாரசாமிபேட்டை பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செல்லியம்மன் கோவில்,உழவர் தெரு மாரியம்மன் கோவில், செல்வகணபதி கோவில், விநாயகர் கோயில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தீர்த்தமலை
இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பி.அக்ரகாரம் முனியப்பசாமி கோவில், வே. முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவில், மொரப்பூர் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரர் கோவில், மூக்கனூர் ஆதிமூல பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.