நாடாளுமன்ற தேர்தல்-2024

'தேர்தல் காலங்களில் மட்டுமே தி.மு.க.வுக்கு கச்சத்தீவு ஞாபகம் வருகிறது' - அண்ணாமலை விமர்சனம்

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. கள்ள மவுனம் சாதித்துக் கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தேர்தல் காலங்களில் மட்டுமே தி.மு.க.வுக்கு கச்சத்தீவு ஞாபகம் வருகிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கடந்த 1974-ம் ஆண்டு, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகு பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மவுனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு, தேர்தல் காலங்களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில் தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம்.

இலங்கைப் போரின்போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், மத்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டணியாகவும் இருந்த தி.மு.க. நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர்தான் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் மிகவும் அதிகரித்தது.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இலங்கை கடற்படையினரால், 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்த தி.மு.க., தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கை வெறும் மவுனமே.

கடந்த 2014-ம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டபோது, தி.மு.க. அன்றும் மவுனமாகத்தான் இருந்தது. அவர்களை பத்திரமாக மீட்டது நமது பிரதமர் மோடியின் அரசு.

நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள் மவுனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் மு.க.ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது."

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்