ஸ்பெஷல்ஸ்

சண்டே ஸ்பெஷல்: மனமான, சுவையான சிக்கன் சால்னா செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற மனமான, சுவையான சிக்கன் சால்னா செய்வது எப்படி? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:-

சிக்கன் - ½ கிலோ (எலும்புடன் கூடியது)

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பட்டை - 3

ஏலக்காய் - 3

கிராம்பு - 4

பிரியாணி இலை - 2

பச்சை மிளகாய் - 3

மிளகு - 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 3 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

பாதாம் பருப்பு - 7

தேங்காய் - ½ கப் (துருவியது)

இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்

மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மல்லி இலை - 1 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

சிக்கன் சால்னாவுக்கு முதலில் மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்கு, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை வைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் அதில் 1 பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம், சீரகம், பாதாம் பருப்பு ஆகியவை சேர்த்து வறுக்கவும்.

லேசாக வறுபட்டதும், அத்துடன் கசகசா, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து, தேங்காய் பொன்நிறமாகும் வரை வறுக்கவும். பின்னர், அதை சற்று ஆறவைத்து, ஒரு மிக்சி ஜாரில் போட்டு பவுடராக அரைக்கவும். மசாலா ரெடி.

அடுத்து சால்னா தயாரிக்க ஒரு குக்கரில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் பிரியாணி இலை, 2 பட்டை, 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து, வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி மற்றும் முதலில் பவுடராக அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அதன்பிறகு வெட்டிவைத்த தக்காளியை சேர்க்கவும். 2 நிமிடம் வெந்தவுடன் கழுவிவைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.

நன்கு கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சால்னா தண்ணீராக இருந்தால்தான், ஊற்றி சாப்பிட நன்றாக இருக்கும். எனவே, அதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் சேர்க்கவும். கூடுதலாக தண்ணீர் சேர்ப்பதால், உப்பு தேவையாக இருக்கும். எனவே, மீண்டும் ஒருமுறை உப்பை சரிபார்த்துக்கொள்ளவும். தேவையென்றால் சேர்க்கவும்.

அதன்பிறகு, குக்கரை மூடி, மிதமான சூட்டில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். அதன்பின்னர், குக்கரை திறக்கவும். எண்ணெய் நன்கு பிரிந்திருக்கும். நன்கு கிளறிவிட்டு, ஒரு கைப்பிடி மல்லி இலையை தூவவும். சுவையான சிக்கன் சால்னா ரெடி.