ஹராரே,
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இளையோர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் பீகாரை சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 15 பவுண்டரி, 15 சிக்சருடன் 175 ரன்கள் குவித்து பல்வேறு வியப்பூட்டும் சாத னைகளை படைத்தார். அதன் விபரம் வருமாறு;
* சூர்யவன்ஷியின் 175 ரன்கள், சீனியரோ அல்லது ஜூனியரோ ஒட்டுமொத்த ஐ.சி.சி. இறுதிப்போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது.
* இளையோர் ஒரு நாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் என்ற சாதனைக்கும் (15 சிக்சர்) சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பும் இச்சாதனை சூர்யவன்ஷி வசமே (கடந்த டிசம்பரில் ஐக் கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 14 சிக்சர்) இருந்தது.
* இளையோர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் சூர்யவன்ஷி 10-க்கு மேல் சிக்சர் அடிப்பது இது 5-வது முறையாகும். மற்ற பேட்டர்கள் அனைவரும் சேர்ந்தே 3 முறை தான் இவ்வாறு அடித்திருக்கிறார்கள்.
* சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதத்தை ருசித்தார். இளையோர் உலகக் கோப்பையில் ஒரு வீரரின் 2-வது மின்னல் வேக சதம் இதுவாகும். இதே உலகக் கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் வில் மலாஜ்சுக் 51 பந்தில் சதம் எடுத்ததே சாதனையாக உள்ளது.
* சூர்யவன்ஷி சிக்சர், பவுண்டரிகள் மூலம் மட்டுமே 150 ரன்கள் திரட்டி விட்டார். இளையோர் போட்டியில் இதுவும் ஒரு சாதனையாகும்.