கிங்ஸ்டன்,
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் இலங்கை அணியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணியில் கமிந்து மெண்டிஸ் மட்டும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 51 ரன்கள் சேர்த்தார்.
148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக விளையாடிய கிங் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஷிம்ரோன் ஹெட்மையரும் வேகமாக ரன்கள் சேர்த்து 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் ஷாய் ஹோப்புடன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். ஹோப் அரைசதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ரோஸ்டன் சேஸ் 26 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாலும், ஹோப் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். பின்னர் ரோவ்மன் பவல் இணைந்து வெற்றியை எளிதாக்கினார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஷாய் ஹோப் 54 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.