சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட போட்டி வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு மோதலாக இளஞ்சிவப்பு (பிங்க்) பந்தில் நடக்கும் போட்டியாகும்.
இந்த போட்டிக்கு தயார்படுத்தும் வகையில் இந்தியா- ஆஸ்திரேலிய ஏ அணிகள் இடையே 3 நாள் பகல்-இரவு பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிங்க் பந்தில் நடக்கும் இந்த பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்கியது. தனக்கு ஓய்வு தேவை என்று கடைசி நேரத்தில் கேப்டன் விராட் கோலி ஒதுங்கிக்கொண்டார். இதனால் அஜிங்யா ரஹானே இந்திய அணியின் கேப்டன் பணியை கவனித்தார். டாஸ் ஜெயித்த அவர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
இதன்படி மயங்க் அகர்வாலும், பிரித்வி ஷாவும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். அகர்வால் (2 ரன்), வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பந்தில் ஸ்லிப்பில் நின்ற பர்ன்சிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுப்மான் கில், பிரித்வி ஷாவுடன் இணைந்தார். துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்ட இவர்கள் ஸ்கோர் 72 ரன்களை எட்டிய போது பிரிந்தனர். பிரித்வி ஷா 40 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி) கிளீன் போல்டு ஆனார்.
ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 102 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு எதிரணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தது. அடுத்த 21 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் 7 விக்கெட் சரிந்தது. இதில் ஹனுமா விஹாரி (15 ரன்), சுப்மான் கில் (43 ரன், 58 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ரஹானே (4 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (5 ரன்), விருத்திமான் சஹா (0) ஆகியோரின் வெளியேற்றமும் அடங்கும். அப்போது இந்தியா 9 விக்கெட்டுக்கு 123 ரன்களுடன் தள்ளாடியது.
இந்த சூழலில் 10-வது விக்கெட்டுக்கு ஜோடி போட்ட ஜஸ்பிரித் பும்ராவும், முகமது சிராஜியும் இந்திய அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றினர். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் மிரட்டிய பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ஆச்சரியப்படுத்தினார். அவரது அதிரடியால் இந்திய அணி கவுரவமான நிலைக்கு நகர்ந்தது.
முதல்தர கிரிக்கெட்டில் பும்ரா முதல்முறையாக அரைசதத்தை கடந்து அசத்தினார். இவர்கள் கடைசி விக்கெட்டுக்கு 71 ரன்கள் (13.2 ஓவர்) சேர்த்தனர். முகமது சிராஜ் 22 ரன்களில் கேட்ச் ஆனார். பும்ரா 55 ரன்களுடன் (57 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். வீரர்களின் ஓய்வறைக்கு பும்ரா திரும்பிய போது சக வீரர்கள் இருபுறமும் கைகளை உயர்த்தி நின்றபடி அவரை உற்சாகப்படுத்தினர்.
முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 48.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் சீன் அப்போட், வில்டர்முத் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி பேட்ஸ்மேன்கள், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் ஷாட்பிட்ச் பந்து தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடினர். 32.2 ஓவர்களில் அந்த அணி 108 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் அலெக்ஸ் கேரி 32 ரன்களும், மார்கஸ் ஹாரிஸ் 26 ரன்களும் எடுத்தனர். டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் வாய்ப்பில் இருக்கும் ஜோ பர்ன்ஸ் டக்-அவுட் ஆனார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நேற்று ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிந்ததும், மழையால் ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் கையே ஓங்கி இருக்கிறது. 86 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை இன்று விளையாடும்.