கிரிக்கெட்

2-வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தினத்தந்தி

ராஜ்கோட்,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று இரவு நடந்தது.

டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டிம் சவுதி ஆகியோர் நீக்கப்பட்டு ஆடம் மில்னே, கிளைன் பிலிப்ஸ் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ஓய்வு பெற்ற நெஹராவின் இடத்தை அறிமுக வீரரான முகமது சிராஜ் பிடித்தார்.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார்கள். 6.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 50 ரன்னை எட்டியது. அதிரடி காட்டிய காலின் முன்ரோ 26 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.

5-வது ஓவரில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் மார்ட்டின் கப்தில் இரண்டு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். 8-வது ஓவரில் முகமது சிராஜ் பந்து வீச்சில் காலின் முன்ரோ தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்க விட்டார். 11 ஓவர்களில் நியூசிலாந்து அணி 100 ரன்களை கடந்தது.

அணியின் ஸ்கோர் 11.1 ஓவர்களில் 105 ரன்னாக இருந்த போது மார்ட்டின் கப்தில் (45 ரன்கள், 41 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட கேப்டன் கனே வில்லியம்சனும் அடித்து ஆடினார். அவர் 12 ரன் (9 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்து வீச்சில் பவுண்டரி அருகில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். சர்வதேச போட்டியில் முகமது சிராஜ் கைப்பற்றிய முதல் விக்கெட் இதுவாகும்.

இதனை அடுத்து டாம் புரூஸ், காலின் முன்ரோவுடன் இணைந்தார். 15.4 ஓவர்களில் நியூசிலாந்து அணி 150 ரன்களை தாண்டியது. நிலைத்து நின்று ஆடிய காலின் முன்ரோ 54 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்சருடன் சதத்தை எட்டினார். 20 ஓவர் போட்டியில் அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும். அவருக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது. 45 ரன்னில் இருக்கையில் ஸ்ரேயாஸ் அய்யரும், 79 ரன்னில் இருக்கையில் யுஸ்வேந்திர சாஹலும், காலின் முன்ரோ கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. காலின் முன்ரோ 58 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 109 ரன்னும், டாம் புரூஸ் 12 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 18 ரன்னும் எடுத்து களத்தில் நின்றனர். இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்னே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட்கோலி 65 ரன்னும் (42 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), டோனி 49 ரன்னும் (37 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன்) எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். காலின் முன்ரோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையை எட்டியது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

ஸ்கோர் போர்டு - நியூசிலாந்து

மார்ட்டின் கப்தில் (சி) பாண்ட்யா
(பி) சாஹல் 45
காலின் முன்ரோ(நாட்-அவுட்) 109
கனே வில்லியம்சன் (சி) ரோகித்
சர்மா (பி) முகமது சிராஜ் 12
டாம் புரூஸ் (நாட்-அவுட்) 18
எக்ஸ்டிரா 12

மொத்தம் (20 ஓவர்களில்
2 விக்கெட்டுக்கு) 196
விக்கெட் வீழ்ச்சி: 1-105, 2-140.


பந்து வீச்சு விவரம்:

புவனேஷ்வர்குமார் 4-0-29-0
முகமது சிராஜ் 4-0-53-1
ஜஸ்பிரித் பும்ரா 4-0-23-0
யுஸ்வேந்திர சாஹல் 4-0-36-1
அக்ஷர் பட்டேல் 3-0-39-0
ஹர்திக் பாண்ட்யா 1-0-14-0

இந்தியா


ரோகித் சர்மா (சி) கிளைன் பிலிப்ஸ்
(பி) டிரென்ட் பவுல்ட் 5
ஷிகர்தவான்(பி)டிரென்ட்பவுல்ட் 1
ஸ்ரேயாஸ் அய்யர் (சி) அண்ட் (பி)
காலின் முன்ரோ 23
விராட்கோலி (சி) கிளைன் பிலிப்ஸ்
(பி) மிட்செல் சான்ட்னெர் 65
ஹர்திக் பாண்ட்யா (பி) சோதி 1
டோனி (சி) மிட்செல் சான்ட்னெர்
(பி) டிரென்ட் பவுல்ட் 49
அக்ஷர் பட்டேல் (சி) கனே
வில்லியம்சன் (பி டிரென்ட் பவுல்ட் 5
புவனேஷ்வர்குமார்(நாட்-அவுட்) 2
ஜஸ்பிரித் பும்ரா (நாட்-அவுட்) 1
எக்ஸ்டிரா 4

மொத்தம் (20 ஓவர்களில்
7 விக்கெட்டுக்கு) 156
விக்கெட் வீழ்ச்சி: 1-6, 2-11, 3-65, 4-67, 5-123, 6-130, 7-154.


பந்து வீச்சு விவரம்:


ஆடம் மில்னே 4-0-30-0
டிரென்ட் பவுல்ட் 4-0-34-4
காலின் டி கிரான்ட்ஹோம் 1-0-10-0
மிட்செல் சான்ட்னெர் 4-0-31-1
சோதி 4-0-25-1
காலின் முன்ரோ 3-0-23-1

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்