கவுகாத்தி,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இங்கு அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதன் மூலம் இந்தியாவின் 49-வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்தது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டார்.
கோலி டக்-அவுட்
டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டேவிட் வார்னர், வானிலை மற்றும் ஈரப்பதமான ஆடுகளத்தன்மையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.
வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பேரென்டோர்ப் புல்டாசாக வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ரோகித் சர்மா ரன் கணக்கை தொடங்கினார். 3-வது பந்தில் மேலும் ஒரு பவுண்டரி ஓடவிட்டார். ஆனால் இந்த ஆரவாரம் அடங்குவதற்குள் ரோகித் சர்மா (8 ரன்), லேசாக இன்ஸ்விங்கான பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (0) அதே ஓவரில், கடைசி பந்தில் பவுலிங் செய்த பேரென்டோர்ப்பிடமே கேட்ச் ஆனார்.
டோனி ஏமாற்றம்
ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான தாக்குதலை கண்டு மிரண்ட இந்திய பேட்ஸ்மேன்கள், கணித்து ஆடாமல் அவசரகதியில் ஆடி விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். ஷிகர் தவான்(2 ரன்), மனிஷ் பாண்டே (6 ரன்) ஆகியோரும் அவரது பந்து வீச்சுக்கே இரையானார்கள்.
இந்த ஊசலாட்டத்தில் இருந்து இந்திய அணியால் மீளவே முடியவில்லை. எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் டோனி (13 ரன்), ஆடம் ஜம்பாவின் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய கேதர் ஜாதவ் (27 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜம்பாவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.
இந்தியா 118 ரன்
ஒரு கட்டத்தில் 70 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் தத்தளித்த இந்திய அணி மூன்று இலக்கை தொடுமா? என்ற கேள்வி எழுந்தது. நல்லவேளையாக ஹர்திக் பாண்ட்யா (25 ரன், 23 பந்து, ஒரு சிக்சர்), குல்தீப் யாதவ் (16 ரன்) ஆகியோர் கவுரவ ஸ்கோராக அணியை 100 ரன்களை கடக்க வைத்தனர்.
20 ஓவர்களில் இந்திய அணி 118 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் 27 வயதான பேரென்டோர்ப் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
ஆஸ்திரேலியா வெற்றி
அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் டேவிட் வார்னர் (2 ரன்), ஆரோன் பிஞ்ச் (8 ரன்) சீக்கிரம் வெளியேற்றப்பட்டாலும், மோசஸ் ஹென்ரிக்சும், டிராவிஸ் ஹெட்டும் அணியை தூக்கி நிறுத்தினர்.
சிறிய இலக்கு என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இருவரும் இந்திய சுழற்பந்து வீச்சை பின்னியெடுத்தனர். குறிப்பாக ஹென்ரிக்ஸ், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்பின் ஓவர்களில் மட்டும் 3 சிக்சர்களை பறக்க விட்டார்.
ஆஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹென்ரிக்ஸ் 62 ரன்களுடனும் (46 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), டிராவிஸ் ஹெட் 48 ரன்களுடனும் (34 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.
ஸ்கோர் போர்டு
இந்தியா
ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ (பி) பேரென்டோர்ப் 8
தவான் (சி) வார்னர் (பி) பேரென்டோர்ப் 2
கோலி (சி) அண்ட் (பி) பேரென்டோர்ப் 0
மனிஷ் பாண்டே (சி) பெய்ன் (பி) பேரென்டோர்ப் 6
கேதர் ஜாதவ் (பி) ஜம்பா 27
டோனி (ஸ்டம்பிங்) பெய்ன் (பி) ஜம்பா 13
ஹர்திக் பாண்ட்யா (சி) சப் (கிறிஸ்டியன்) (பி) ஸ்டோனிஸ் 25
புவனேஷ்வர்குமார் (சி) ஹென்ரிக்ஸ்(பி)கவுல்டர்-நிலே 1
குல்தீப் யாதவ் (சி) பெய்ன் (பி) ஆண்ட்ரூ டை 16
பும்ரா (ரன்-அவுட்) 7
சாஹல் (நாட்-அவுட்) 3
எக்ஸ்டிரா 10
மொத்தம் (20 ஓவர்களில் ஆல்-அவுட்) 118
விக்கெட் வீழ்ச்சி: 1-8, 2-8, 3-16, 4-27, 5-60, 6-67, 7-70, 8-103, 9-115
பந்து வீச்சு விவரம்
பேரென்டோர்ப் 4-0-21-4
கவுல்டர்-நிலே 4-0-23-1
ஆண்ட்ரூ டை 4-0-30-1
ஆடம் ஜம்பா 4-0-19-2
ஸ்டோனிஸ் 4-0-20-1
ஆஸ்திரேலியா
ஆரோன் பிஞ்ச் (சி) கோலி (பி) புவனேஷ்வர் 8
வார்னர் (சி) கோலி (பி) பும்ரா 2
ஹென்ரிக்ஸ் (நாட்-அவுட்) 62
டிராவிஸ் ஹெட் (நாட்-அவுட்) 48
எக்ஸ்டிரா 2
மொத்தம் (15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு) 122
விக்கெட் வீழ்ச்சி: 1-11, 2-13
பந்துவீச்சு விவரம்
புவனேஷ்வர்குமார் 3-0-9-1
பும்ரா 3-0-25-1
ஹர்திக் பாண்ட்யா 2-0-13-0
குல்தீப் யாதவ் 4-0-46-0
யுஸ்வேந்திர சாஹல் 3.3-0-29-0