கிரிக்கெட்

2வது ஒரு நாள் போட்டி: ராகுலின் சதத்துடன் வலுவான நிலையில் இந்தியா; 336/6

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் ராகுலின் சதத்துடன் இந்திய அணி 336 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

தினத்தந்தி

புனே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் போட்டி தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.

ரசிகர்களுக்கு அனுமதி இன்றி நடைபெறும் இந்த போட்டி தொடர் பூட்டிய ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (25), ஷிகர் தவான் (4) ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்துள்ளார். அவர், 66 ரன்கள் (79 பந்துகள் 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்திருந்தபோது, ரஷீத் பந்து வீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கோலி, ராகுல் இணை 119 பந்துகளில் 100 ரன்களை எடுத்தனர். கோலியை தொடர்ந்து ராகுலும் அரை சதம் விளாசினார். முதல் ஒரு நாள் போட்டியில் அரை சதம் அடித்த கோலி (56) இந்த போட்டியிலும் அரை சதம் விளாசினார். இதேபோன்று ராகுலும் முதல் ஒரு நாள் போட்டியில் அரை சதம் (62) அடித்ததுடன் இந்த போட்டியில் அதிரடி காட்டி அரை சதம் மற்றும் சதம் விளாசினார்.

ராகுலுடன் இணைந்து விளையாடிய ரிஷாப் பண்ட் அரை சதம் அடித்தது அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. அவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்கள் சேர்த்தனர். இந்த இணை 80 பந்துகளில் 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டாம் கர்ரன் பந்து வீச்சில் ராகுல் அடித்த பந்து, ரீஸ் டாப்ளே கைகளில் சிக்கியது. இதனால், ராகுல் 108 (114 பந்துகள், 7 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களில் ஆட்டமிழந்து திரும்பினார்.

தொடர்ந்து, ரிஷாப் பண்ட் 77 (40 பந்துகள் 3 பவுண்டரி 7 சிக்சர்கள்) ரன்களிலும், ஹர்தீக் பாண்ட்யா 35 (16 பந்துகள் 1 பவுண்டரி 4 சிக்சர்கள்) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். குருணல் பாண்ட்யா (12) மற்றும் ஷர்துல் தாக்குர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 337 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு