லக்னோ,
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெஃபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். ஸ்மிரிதி மந்தனா 7 ரன்களில் கேட்ச் ஆன நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஷெஃபாலி வர்மா 47 ரன்களில் போல்ட் ஆனார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 31 ரன்களும், ரோட்ரிகுவெஸ் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
8 பவுண்டரிகள் விளாசிய ரிச்சா கோஷ் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை லிசெல் லீ, 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அதிரடி தொடக்கம் தந்தார். அணி கோஷ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கேப்டன் சனே லுஸ் 20 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன்பிறகு, களமிறங்கிய லாரா வோல்வார்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் விளாசி தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார்.
20 வது ஓவரின் கடைசி பந்து வரை ஆடிய தென் ஆப்ரிக்க அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.