ஹாமில்டன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையே இன்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான டிவோன் கான்வே 60 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இறுதியில் க்ளாக்சன் அதிரடி காட்ட, நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் மல்டர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் ஜார்ஜ் லிண்டே மட்டும் 33 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 15.3 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 68ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.