லண்டன்,
4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 48 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 391 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 100 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 362 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக விளையாடிய ஹென்றி நிகோல்ஸ் 121 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 463 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
463 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இதனால் 4-வது நாள் முடிவில் 48 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 75 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணி இன்னும் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். மறுபுறம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் நியூசிலாந்து அணி தொடரை சமன் செய்யும். இதனால் 2-வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.