நாட்டிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர். இதில் ஷிகர் தவான் 35(65) ரன்களிலும், அவரைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் 23(53) ரன்களிலும், புஜாரா 14(31) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ரகானே, விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடினர். தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ரகானேவும் 13-வது அரை சதத்தை பதிவு செய்தார். பின்னர் ரகானே 81(131) ரன்களில் வெளியேறிய நிலையில், சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 97(152) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து பாண்ட்யாவும் 18(58) ரன்களில் வெளியேறினார். பின்னர் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 307 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் இந்திய அணியின் சார்பில் ரிஷாப் பாண்ட் 22(32) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், பிராட் மற்றும் ரஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.