நாட்டிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்சில் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் (35) மற்றும் கே.எல். ராகுல் (23) ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களை அடுத்து புஜாரா (14) ரன்களுடன் வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி (51) மற்றும் ரஹானே (53) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 56 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் வோக்ஸ் 15 ஓவர்கள் வீசி 45 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.