சென்னை,
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றநிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டான்டனில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும்.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜெமிமா, அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என். ஸ்ரீ சரணியை வெகுவாக பாராட்டினார்.
ஜெமிமா கூறுகையில்,
"சரணிக்கு இங்கிலாந்து மைதானங்கள் மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். கடந்த முறை இங்கு வந்தபோது அவர்தான் தொடர் நாயகி விருது வென்றார். இளம் வயதிலேயே அணியின் முதன்மை இடதுகை ஸ்பின்னராக பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுகிறார். அவர் மிகவும் கடின உழைப்பாளி. பயிற்சியின் போது தொடர்ந்து பந்துவீசிக் கொண்டே இருப்பார்" என்றார்.
சண்டிகரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நந்தினி சர்மாவையும் ஜெமிமா பாராட்டினார். அவர் கூறுகையில்,
"நந்தினி எதையும் மிகவும் இயல்பாகவும் தைரியமாகவும் எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவர். ஸ்லோயர் பால், பவுன்சர் என கேப்டன் கேட்கும் எந்த வகை பந்தையும் அழுத்தமான சூழ்நிலையிலும் துல்லியமாக வீசும் திறன் அவரிடம் உள்ளது"என்றார்.
ஸ்ரீ சரணி மற்றும் நந்தினி சர்மா ஆகிய இருவரும் சமீபத்திய போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இவர்களின் வளர்ச்சி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.