சிட்னி,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர்.
இதில், ராகுல் 9 (6 பந்துகள்) குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுடன், புஜாரா கைகோர்த்து விளையாடினார். இதில் மயங்க் அகர்வால் 77 ரன்கள் (112 பந்துகள்) அடித்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடித்த 18-வது சதம் இதுவாகும். இதற்கிடையில், ரகானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், உணவு இடைவேளை வரை இந்தியா 117 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 181 (332 பந்துகள் 21 பவுண்டரிகள்), பன்ட் 27 ரன்கள் எடுத்துள்ளனர்.