கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி: தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தல்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி சூப்பராக வெற்றி பெற்றது. அரிய சாதனையாக தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

தினத்தந்தி

மவுன்ட் மாங்கானு,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. முந்தைய ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ரோகித் சர்மா அணிக்கு திரும்பியதுடன் கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். நியூசிலாந்து அணியில் மாற்றம் இல்லை. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு இந்த ஆட்டத்திலும் ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணியை டிம் சவுதி வழிநடத்தினார்.

டாஸ் ஜெயித்த இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இதன்படி சஞ்சு சாம்சனும், லோகேஷ் ராகுலும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். கடந்த ஆட்டத்தை போன்று இந்த முறையும் சாம்சன் (2 ரன்) ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினார். இதன் பின்னர் கேப்டன் ரோகித் சர்மா வந்தார்.

இந்த நியூசிலாந்து பயணத்தில் மெச்சத்தகுந்த பேட்டிங்கை வெளிப்படுத்தும் லோகேஷ் ராகுல் இந்த ஆட்டத்திலும் ரன்வேட்டை நடத்தினார். டிம் சவுதியின் ஒரே ஓவரில் ஒரு சிக்சரும், 2 பவுண்டரியும் சாத்தினார். 5.1 ஓவர்களில் இந்தியா 50 ரன்களை தொட்டது. மறுமுனையில் நிதானம் காட்டிய ரோகித் சர்மா, சுழற்பந்து வீச்சாளர்கள் சான்ட்னெர், சோதியின் ஓவர்களில் சிக்சரை பறக்க விட்டார். இவர்கள் ஆடிய விதம், இந்திய அணி 180 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று கணிக்கப்பட்டது.

அணியின் ஸ்கோர் 96 ரன்களை எட்டிய போது (11.3 ஓவர்) லோகேஷ் ராகுல் 45 ரன்களில் (33 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கவர் திசையில் நின்ற சான்ட்னெரிடம் கேட்ச் ஆனார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார்.

இன்னொரு பக்கம் தனது 21-வது அரைசதத்தை எட்டிய கேப்டன் ரோகித் சர்மா எதிர்பாராத விதமாக இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாமல் அவதிப்பட்டார். வலி அதிகமானதால் வேறு வழியின்றி ரிட்டயர்ட்ஹர்ட் ஆகி பாதியிலேயே வெளியேறினார். ரோகித் சர்மா 60 ரன்கள் (41 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

தடாலடியாக இரண்டு சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் இறுதி கட்டத்தில் நியூசிலாந்து பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினார். ஷிவம் துபேவும் (5 ரன், 6 பந்து) சோபிக்கவில்லை. இதனால் இந்தியாவின் ரன்ரேட் வெகுவாக தளர்ந்தது. கடைசி ஓவரில் மனிஷ் பாண்டே, ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து 160 ரன்களை கடக்க உதவினார்.

20 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 33 ரன்களுடனும் (31 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), மனிஷ் பாண்டே 11 ரன்னுடனும் (4 பந்து) களத்தில் இருந்தனர்.

ரோகித் சர்மா காயத்துக்கு சிகிச்சை பெற்றதால் பிற்பாதியில் இந்திய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் செயல்பட்டார். 164 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மார்ட்டின் கப்தில் (2 ரன்), வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். எதிர்முனை பேட்ஸ்மேனுடன் ஆலோசித்து விட்டு கப்தில் டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யாமல் பெவிலியன் திரும்பினார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை தாக்காமல் விலகி செல்வது தெரிந்தது. அப்பீல் செய்திருந்தால் அதிர்ஷ்டம் ஒட்டியிருக்கும்.

மற்றொரு தொடக்க சூறாவளி பேட்ஸ்மேன் காலின் முன்ரோ (15 ரன்), வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்த கையோடு அடுத்த பந்தில் கிளன் போல்டு ஆகிப்போனார். டாம் புருஸ் (0) ரன்-அவுட் ஆனார்.

17 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த நியூசிலாந்து அணிக்கு விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் இணைந்து நம்பிக்கையூட்டினர். அணியை படிப்படியாக சரிவில் இருந்தும் மீட்டனர். 9-வது ஓவர் வரை ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. வெளியே அருகருகே உட்கார்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்த காட்சி.

10-வது ஓவரை வீசிய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவின் ஒரே ஓவரில் டிம் செய்பெர்ட் -டெய்லர் கூட்டணி 4 சிக்சர் உள்பட 34 ரன்களை நொறுக்கித்தள்ளி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இதனால் நெருக்கடியும் அவர்களுக்கு குறைந்தது. கடைசி 9 ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 57 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்ததால் இலக்கை சிக்கலின்றி அடைந்து விடும் சூழல் தென்பட்டது.

4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் திரட்டிய இந்த ஜோடி 13-வது ஓவரில் பிரிந்தது. நவ்தீப் சைனியின் வேகத்தில் செய்பெர்ட் (50 ரன், 30 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) சாம்சனிடம் பிடிபட்டார். இந்த விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.

இதன் பின்னர் இந்திய பவுலர்களின் கை ஓங்கியது. ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், சைனி, ஷர்துல் தாகூர் அடுத்தடுத்த ஓவர்களில் சிக்கனத்தை காட்டி குடைச்சல் கொடுத்தனர். இதனால் உருவான நெருக்கடியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 5 ஓவர்கள் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லாத அளவுக்கு நியூசிலாந்தின் உத்வேகத்துக்கு நமது பவுலர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.

நியூசிலாந்தின் ஒரே நம்பிக்கையாக காணப்பட்ட ராஸ் டெய்லர் (53 ரன், 47 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) சைனியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இது ராஸ் டெய்லரின் 100-வது சர்வதேச 20 ஓவர் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்ற அவர் அணியை கரைசேர்க்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.

19-வது ஓவரில் பும்ரா மேலும் ஒரு விக்கெட்டை சாய்த்து வெறும் 3 ரன் மட்டுமே வழங்கி, மிரட்டினார். கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் வீசிய இந்த ஓவரில் சோதி 2 சிக்சர் விரட்டி லேசான கிலியை ஏற்படுத்திய போதிலும், இறுதியில் இந்தியாவுக்கு சுபமாக அமைந்தது.

20 ஓவர்களில் நியூசிலாந்து அணியால் 9 விக்கெட்டுக்கு 156 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றியை நெருங்கி வந்த நியூசிலாந்து அணி 25 ரன்கள் இடைவெளியில் 7 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால், வழக்கம் போல் கடைசி நேரத்தில் சோடைபோய் விட்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி பிரமிக்க வைத்துள்ளது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா 20 ஓவர் தொடரை வென்றது இதுவே முதல்முறையாகும். மேலும் 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் ருசித்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்தியா படைத்தது.

இந்த ஆட்டத்தில் 4 ஓவரில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்டநாயகனாகவும், 2 அரைசதம் உள்பட மொத்தம் 224 ரன்கள் சேர்த்து தொடரில் ரன் குவிப்பில் முதலிடத்தை பிடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்து இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 5-ந்தேதி ஹாமில்டனில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

மெய்டன் மன்னன் பும்ரா

* இந்த தொடரில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 5 ஆட்டங்களில் விளையாடி 56, 57, 27, 39, 45 ரன் என்று மொத்தம் 224 ரன்கள் எடுத்துள்ளார். இருநாட்டு 20 ஓவர் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் இவர் தான். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விராட் கோலி 199 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் ஓவரில் ரன் ஏதும் வழங்காமல் மெய்டனாக்கினார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இது அவரது 7-வது மெய்டன் ஓவர் ஆகும். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் அதிக மெய்டன் ஓவர் வீசியிருந்த இலங்கை வீரர் குலசேகராவின் சாதனையை தகர்த்தார்.

* ரோகித் சர்மா 31 ரன்கள் எடுத்த போது, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) 14 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில் 8-வது வீரராக இணைந்தார்.

* 20 ஓவர் கிரிக்கெட்டில் 50 ரன்களை 25-வது முறையாக (4 சதம், 21 அரைசதம்) கடந்த ரோகித் சர்மா அதிக முறை 50 ரன்களை கடந்த வீரர்களில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியை (24 முறை) பின்னுக்கு தள்ளினார்.

* வெளிநாட்டு மண்ணில் 3 மற்றும் அதற்கு மேல் ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா முழுமையாக வெல்வது இது 3-வது நிகழ்வாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கிலும், கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசை 3-0 என்ற கணக்கிலும் அவர்களது இடத்தில் இந்தியா பந்தாடி இருந்தது.

* 20 ஓவர் கிரிக்கெட்டில் உள்நாட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணியான இலங்கையின் (23 தோல்வி) மோசமான சாதனையை நியூசிலாந்து சமன் செய்துள்ளது.

* இந்த தொடருக்கு முன்பாக இந்தியா-நியூசிலாந்து இடையிலான 20 ஓவர் போட்டிகளின் முடிவில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. அதாவது நியூசிலாந்து 8 ஆட்டத்திலும் இந்தியா 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இப்போது இரு அணிகளும் தலா 8 வெற்றி என்ற சமநிலையை எட்டியிருக்கிறது.

ஒரே ஓவரில் 34 ரன்களை வாரி வழங்கிய ஷிவம் துபே

இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான ஷிவம் துபேயின் ஒரே ஓவரை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்பெர்ட்டும், ராஸ் டெய்லரும் பொளந்து கட்டினர். ஆட்டத்தின் 10-வது ஓவரை அவர் வீச வந்தார். முதல் 2 பந்துகளை சிக்சருக்கு தெறிக்கவிட்ட செய்பெர்ட், 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் பின்னர் 5-வது பந்தை எதிர்கொண்ட ராஸ் டெய்லர் அதை பவுண்டரி நோக்கி விரட்ட, வாஷிங்டன் சுந்தரின் பீல்டிங் குறைபாட்டால் அது பவுண்டரியாக மாறியது. மேலும் இந்த பந்தை ஷிவம் துபே, காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ-பாலாக வீசியது தெரியவந்ததால் எக்ஸ்டிரா வகையிலும் நியூசிலாந்துக்கு ஒரு ரன் கிடைத்தது. இதன் பின்னர் மீண்டும் வீசப்பட்ட 5-வது பந்தையும், 6-வது பந்தையும் ராஸ் டெய்லர் சிக்சருக்கு ஓடவிட்டார். ஆக இந்த ஒரே ஓவரில் நியூசிலாந்துக்கு 34 ரன்கள் கிட்டியது. அனுபவம் இல்லாத ஷிவம் துபே, எல்லா பந்துகளையும் ஷாட்பிட்ச்சாக வீசி உதை வாங்கிக் கொண்டார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் இந்திய வீரர் யுவராஜ்சிங் 6 பந்துகளையும் சிக்சராக்கி 36 ரன்கள் விளாசியதே சாதனையாக நீடிக்கிறது. இந்திய பவுலர்களில் இதற்கு முன்பு வள்ளல் என்ற அவச்சாதனை ஸ்டூவர்ட் பின்னி வசம் (2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஒரே ஓவரில் 32 ரன் வழங்கியிருந்தார்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை