சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான 20 ஓவர் தகுதிச்சுற்று தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நேபாளம் மற்றும் சீனா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்து மிரட்டியது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி 300 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 5-வது முறையாகும்.
நேபாள அணியின் தொடக்க வீரர் குஷல் புர்டெல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களுடன் 129 ரன்கள் விளாசி அசத்தினார். அவரது இன்னிங்ஸின் சிறப்பம்சமாக, சீனாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சென் ஜுவ் யூ வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் பறக்கவிட்டார். அந்த ஓவரில் ஒரு வைடு ரனும் சேர்ந்து மொத்தம் 37 ரன்கள் வந்தது.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓவரின் 6 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பிய 5-வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை குஷல் புர்டெல் படைத்தார்.
இதற்கு முன்பு இந்த சாதனையை நிகழ்த்திய வீரர்கள்:
யுவராஜ் சிங் – இங்கிலாந்துக்கு எதிராக (2007)
பொல்லார்டு – இலங்கைக்கு எதிராக (2021)
தீபேந்திர சிங் ஐரி– கத்தாருக்கு எதிராக (2024)
மனன் பஷீர் – ஜிப்ரால்டருக்கு எதிராக (2025)
பின்னர் 314 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சீன அணி, நேபாள பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் நேபாள அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தகுதிச்சுற்றை வெற்றிகரமாக தொடங்கியது.