முல்லன்பூர்,
முல்லன்பூரில் நடைபெற்று வரும் இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு முதல்தர கிரிக்கெட்டில் 9,000 ரன்களை எட்ட ராகுலுக்கு வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டநிலையில், இன்றைய முதலாம் நாள் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜியா-உர்-ரஹ்மான் வீசிய ஓவரில் பவுண்டரி அடித்ததன் மூலம் அவர் இந்த வரலாற்றுச் சாதனையை எட்டினார்.
இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார் கே.எல்.ராகுல்.
இப்போட்டியில் ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலின் விக்கெட்டுக்குப் பிறகு சாய் சுதர்சன் களமிறங்கினார். ராகுல் - சாய் சுதர்சன் ஜோடி இணைந்து இந்திய அணியின் ரன் வேகத்தைத் தொடர்ந்து உயர்த்தியதுடன், அணியை 50 ரன்களையும் கடக்க செய்தது.
ராகுலின் சாதனை இன்னிங்ஸும், சாய் சுதர்சனின் நிதானமான தொடக்கமும் இந்திய அணியை நல்ல நிலையில் வைத்துள்ளன. பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் நோக்கில் இந்த ஜோடி தொடர்ந்து விளையாடி வருகிறது.
உணவு இடைவேளை வரை இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 37 ரன்களும், சுதர்சன் 32 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.