கிரிக்கெட்

இந்திய அணியில் அறிமுகமாகும் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி?... சீனியர் வீரர்களுக்கு ஆபத்தா?

வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi), தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ், 15 வயதிலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களைத் திணறடித்து வருகிறார்.

இந்த சீசனில் இதுவரை 2 அரைசதங்களை விளாசியுள்ளார். ஆர்சிபி அணிக்கு எதிராக 26 பந்துகளில் 78 ரன்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பும்ராவின் பந்துவீச்சில் அதிரடி காட்டியது பிசிசிஐ தேர்வாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதுபோல் தெரிகிறது.

Also read:ஐபிஎல்: 'பச்சை' நிற ஜெர்சியில் பெங்களூரு... டெல்லி கேப்பிட்டல்ஸுடன் இன்று மோதல்

வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்காக (ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள்), பிசிசிஐ 35 வீரர்கள் கொண்ட உத்தேசப் பட்டியலைத் தயாரித்துள்ளது. இதில் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அயர்லாந்துக்குத் தனி விசா தேவைப்படுவதால், முன்கூட்டியே இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷியின் வருகை, அணியில் ஏற்கனவே உள்ள தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைபவ் அணியில் சேர்க்கப்பட்டால், இவர்களில் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் தேர்வாளர்களுக்கு ஏற்படும் என கூறப்படுகிறது.

இது சூர்யகுமார் யாதவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். 2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு, சூர்யகுமாரின் பேட்டிங் சராசரி 20-க்கும் குறைவாகவே உள்ளது.

ஜூன் மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்து தொடரில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து (16 வயதில் அறிமுகம்), இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் மிக இள வயது வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.