கிரிக்கெட்

கிரிக்கெட்டுக்கு சிறந்த வீரர் ஒருவர் உருவாகி வருகிறார்: சூர்யவன்ஷிக்கு ஜெயசூர்யா புகழாரம்

நேற்று நடந்த போட்டியில் பவர்பிளேவில் 8 சிக்சர்களை பறக்க விட்டு ஜெயசூர்யாவின் (7 சிக்சர்கள்) சாதனையை சூர்யவன்ஷி முறியடித்து உள்ளார்.

புதுடெல்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல். போட்டி தொடர்களில் பல சாதனைகளை படைத்து வருகிறார். அவர் ஐ.பி.எல். போட்டி தொடர்களில், 4 முறை 10-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். அவற்றில் இந்த சீசனில் மட்டுமே 3 முறை இந்த சாதனையை படைத்திருக்கிறார். இதனால், கெயிலின் சாதனையை அவர் சமன் செய்து இருக்கிறார்.

நடப்பு தொடரில் சூர்யவன்ஷி 15 ஆட்டங்களில் விளையாடி 65 சிக்சர்களை எடுத்திருக்கிறார். இதன் மூலம் ஐ.பி.எல்.லில் ஒரு சீசனில் அதிக சிக்சர் விளாசியவர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டில் கிறிஸ் கெய்ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி 15 ஆட்டங்களில் 59 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதனால், அவரது 14 ஆண்டு கால சாதனையை சூர்யவன்ஷி முறியடித்து உள்ளார்.

இதேபோன்று இலங்கையின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யாவின் சாதனையையும் அவர் முறியடித்து இருக்கிறார். ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பவர்பிளேவில் 8 சிக்சர்களை பறக்க விட்டு ஜெயசூர்யாவின் (7 சிக்சர்கள்) சாதனையை சூர்யவன்ஷி முறியடித்து உள்ளார்.

இதுபற்றி ஜெயசூர்யா தன்னுடைய எக்ஸ் பதிவில் வெளியிட்ட செய்தியில், இந்த இளம் வயதில் மிக சிறந்த திறமையையும், நம்பிக்கையையும் கொண்டவராக சூர்யவன்ஷி உள்ளார். கிரிக்கெட்டுக்கு சிறப்பான விளையாட்டு வீரர் ஒருவர் உருவாகி வருகிறார் என தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT