ஹராரே,
சர்வதேச டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று நடந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சினை தேர்வு செய்தது.
இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஆரான் பின்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்களும் அடங்கும். அவருடன் விளையாடிய ஷார்ட் 42 பந்துகளில் 46 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்துள்ளார்.
ஆரன் பின்ச் 172 ரன்கள் எடுத்தது உலக சாதனை ஆகும். இதற்கு முன்பு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 156 ரன்களை எடுத்து பின்ச் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த தனிநபர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். இவற்றில் 11 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்சர்கள் அடங்கும். தனது சொந்த சாதனையை பின்ச் இன்று முறியடித்து உள்ளார்.
இதே போன்று பின்ச் மற்றும் ஷார்ட் இணை கைகோர்த்து 200 ரன்களை எடுத்துள்ளது. இது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன்முறை என்ற சாதனையை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.